டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம்ஆத்மி அரசுக்கும்,  துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளுநர் ராஜினாமா செய்யக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்களும் போட்டி போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்த சிபிஐ, அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது.  இதையடுத்து, ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்குவாங்க பாஜக முயல்வதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில்,. ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட  ஆம்ஆத்மி அரசின் 45 க்கும் மேற்பட்ட கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்து இல்லை என்று கூறி, ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். இது ஆம்ஆத்மி அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்ததும், டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிற்கு எதிராக ஆம்ஆத்ம எம்எல்ஏக்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்று டெல்லி சட்டசபை வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை நிலை ஆளுநர் மீதான ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்களும் போட்டி போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தார். அப்போது, தன்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தந்தது தொடர்பாக 1400 கோடி அளவிற்கு ஊழல் செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.