ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள பல பெரிய வணிக நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சரியான கட்டணங்களை செலுத்தாமல் தண்ணீரைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இவற்றில் பல நிறுவனங்களுக்கு மீட்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நீர் இணைப்புகள் கூட இல்லை என்றும் இந்நிறுவனங்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்த துல்லியமான தகவல்கள் கூட இல்லை என்று டெல்லி நீர் அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விருந்து அரங்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு டெல்லி அரசு ஒரு புதிய விதியை உருவாக்கியுள்ளது. வழக்கமான நீர் மீட்டர் அளவீடுகளுக்குப் பதிலாக அவை வெளியேற்றும் கழிவுநீரின் அளவின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி ஜல் வாரியம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பின்னோக்கி கணக்கிடும் நுட்பத்தால் அரசாங்கத்தால் நூற்றுக்கணக்கான கோடி வீணான பணத்தை மீட்டெடுக்கவும், நீர் திருட்டை நிறுத்தவும் முடியும் என்று கூறப்படுகிறது.

“இப்போது ஒவ்வொரு துளியும் கணக்கிடப்படும். எவ்வளவு கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதோ, அதற்கேற்ப தண்ணீருக்கு பணம் செலுத்த வேண்டும். பொது வளங்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களுக்கு இலவச சவாரி முடிந்துவிட்டது,” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இது ஒரு வரி அல்ல. இது பொறுப்புணர்வு சார்ந்த கேள்வி. இலவச பொது நீரில் பெரிய அளவில் லாபம் ஈட்டும் நடவடிக்கைகளை இனி பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று அவர் கூறினார்.

அதேவேளையில் இந்த கட்டணம் வணிக ரீதியான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.