சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து வருகிறது. இதனால் சாலைகளில் தேங்கும் மழைநீர் அகற்றப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும், பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், இன்ற மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.இது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில்,. தற்போது மாலை கரையை கடக்கும் என குறிப்பிட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மரங்கள் விழுந்த பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்பட்டுஉள்ளது.
இதற்கிடையில் புயல் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கல்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது சென்னை மெரினா கடற்கரை உள்பட பல பகுதிகளில் 13 அடி வரை கடல் அலை எழுந்து கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது
சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளது. பெரும்பாலான தெருக்களிலும் வெள்ளநீர் ஆறாக ஓடுகிறது.
இதைத்தொடர்ந்து, மழைநீரை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீரை வெளியேற்றுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா, சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உடனுக்குடன் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றவர், மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றவர், தொடர்ந்து மழை பெய்வதால் ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும், ஓஎம்ஆர் பகுதியில் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தவர், சூறாவளியால் மரங்கள் உடைந்த இடங்களில் அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றவர், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளார்.