கோழிக்கோடு

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றோர் வரதட்சணை வாக்கினால் படம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.

நாடெங்கும் வரதட்சணை கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதைத் தடுக்க பல சட்டங்கள் இயற்றிய போதும் அதையும் மீறி வரதட்சணை வாங்குவது நடந்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பெண்களுக்குக் கிலோ கணக்கில் தங்க நகைகள் போடுவதாகப் படங்களுடன் செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது கோழிக்கோடு பல்கலைக்கழக துணை பதிவாளர் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.  அந்த சுற்றறிக்கையில், ” கேரள மாநிலத்தில் சமீப காலமாக வரதட்சணை கொடுமை உள்ளிட்ட குடும்ப வன்முறையால் மரணங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்ததை அடுத்து ,துணைவேந்தர் ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

அந்த யோசனையின்படி, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கல்வி நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.  அதற்கான உறுதி மொழியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களிடமும், பெற்றோரிடமும் பெறவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஒரு படிவத்தின் மூலம் ஒவ்வொரு மாணவரும், பெற்றோரும், கல்லூரியில் சேரும்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.  ஏற்கனவே 2021-22ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களிடமும் இந்த உறுதிமொழிப் படிவத்தைப் பெற வேண்டும்.

இந்த உத்தரவு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும். மாணவர் உறுதிமொழிப் படிவத்தில், உறுதிமொழியை மீறி நான் வரதட்சணை வாங்கினால் எனது பட்டத்தைத் திரும்பப் பெறலாம், பட்டமே அளிக்காமல் இருக்கலாம், மாணவர் சேர்க்கையை ரத்து செய்யலாம்” .என்று குறிப்பிடப்பட்டுள்ளது.