டில்லி:
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சினை பல ஆண்டு காலமாக நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளை மாளிகையில் இருக்கும் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்பை இம்ரான்கான் சந்தித்து பேசினார். அவரிடம், காஷ்மீர் பிரச்சினையில், மோடி தன்னை சமரச தூதராக இருக்க அழைத்தார் என்று டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியானது.இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆனால், இதற்கு இந்திய வெளியுறவுத்துறை மற்றும், டிரம்பின் கருத்துக்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஹர்ஷ் ஷரிங்லாவிடம், ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி. பிராட் ஷெர்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காஷ்மீர் பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. இதில், மூன்றாவது நாடு தலையிடுவதை விரும்பவில்லை. மத்தியஸ்தம் செய்யும்படி டிரம்பிடம், பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை என விளக்கம் அளித்தார்.
ஆனால், அவரது விளக்கத்தை ஏற்க காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மறுத்துள்ள நிலையில், இன்றும் இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பி உள்ளது.
இதையடுத்து, மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை என்று உறுதியாக மறுத்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் 3வது நாடு மத்தியஸ்தம் என்ற கேள்விக்கே இடமில்லை என்றவர், இது சிம்லா ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.