திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் ஒரு வளர்ப்பு நாய் அடுத்த வீட்டு நாயுடன் தவறான  உறவு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் ஒரு வெள்ளை பாமரேனியன் நாய் ஒன்று மார்கெட் பகுதியில் அனாதையாக திரிந்துக் கொண்டிருந்தது. அந்த நாய் குறித்து அங்குள்ளவர்கள் பீட்டா அமைப்புக்குத் தகவல் அளித்தனர்.  அந்த அமைப்பைச் சேர்ந்த ஷமீன் என்பவர் அங்குச் சென்று அந்த நாயை மீட்டுள்ளார். அந்த நாயின் கழுத்து பட்டியில் ஒரு கடிதம் ஒன்று செருகப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தில், “இது ஒரு நல்ல இனத்தைச் சேர்ந்த நாய். இது மிகவும்  நேர்த்தியாக நடந்துக் கொள்ளும். தனது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொண்டு சரியான அளவு சரியான நேரத்தில் சாப்பிடும். இந்த நாய்க்கு எவ்வித நோயும் கிடையாது. ஐந்து தினங்களுக்கு ஒரு முறை குளிக்கும். அடிக்கடி குரைப்பது மட்டுமே பிரச்சினை ஆகும்

இந்த நாய் கடந்த மூன்றாண்டுகளில் ஒருவரைக் கூட கடித்ததில்லை. இந்த நாய் பால், ரொட்டி, பச்சை முட்டை போன்றவற்றை உட்கொள்ளும். இந்த நாய் அருகாமையில் உள்ள வேறு ஒரு நாயுடன் தவறான உறவு வைத்திருந்தது. அதனால் இந்த நாயை நாங்கள் புறக்கணிக்கிறோம்” என எழுதப்பட்டிருந்தது. அந்த நாய் தற்போது பீட்டா அமைப்பினர் பாதுகாப்பில் உள்ளது.

இது குறித்து பீட்டா அமைப்பைச் சேர்ந்த ஷமீன், “அனாதையாகத் திரிந்த இந்த வெள்ளை பாமரேனியன் நாய் குறித்து எனக்கு தகவல் வந்ததும் நான் அதை மீட்டேன். அந்த நாய் நல்ல ஆரோக்யத்ஹ்டுடன் இருந்தது. வழக்கமாக உடல் நலம் குன்றிய மற்றும் வயதான நாய்கள் மட்டுமே புறக்கணிக்கப்படும். நாயின் கழுத்துப் பட்டையில் இருந்த குறிப்பைக் கண்டு அதிர்ந்தேன். இந்த நாயைப் புறக்கணித்த மனிதர்களுக்கு மனிதாபிமானம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.