சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி , திமுக எம்.பி. கனிமொழி பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி விஏடி.கலிவரதன் நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்கி, விமர்சிப்பவர்களை வேட்டையாடி வருகிறது. குறிப்பாக பாஜக, அதிமுக போன்ற எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் வகையில் காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து நேற்று (23ந்தேதி) மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று 25 ஆயிரம் இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம்,விலைவாசி உயர்வு, அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்க மறுப்பது, மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கத் தவறியது உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அதுபோல விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அப்பகுதி தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் கண்டன உரை நிகழ்திய போது, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய திமுக எம்பி கனிமொழி பற்றியும் அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இவரது பெயரில் காவல்துறையில் திமுகவினர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். நேற்று நள்ளிரவு பாஜக தலைவர் விஏடி.கலிவரதன் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார். கலிவரதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். பின்னர், அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.