சென்னை:  கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் கூறினார்.

வியாபாரிகளின் பணத்தாசை… குடிப்பழக்கமே இல்லாத திமுக நபரான கண்ணுக்குட்டி விற்பனை செய்த விஷ சாராயத்தால், துயரபுரமாக மாறியுள்ளது கருணாபுரம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ எட்டி உள்ளது. மேலும் 140 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இங்கு கள்ளச்சாராய விற்பனை செய்தது திமுக பிரமுகர் என்பதும்,  இதில் திமுக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், காவல்நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தும், அதை காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில், கள்ளச்சாராய சாவு குறித்து உண்மைக்கு ஆரம்பத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டதுபோன்றவை திமுக அரசு மீது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சாவுகளுக்கு அரசு ரு.10 லட்சம் நிவாரணம் வழங்குவதும் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கவும் அரசு மறுத்து வருகிறது.

திமுக அரசின் இதுபோன்ற நிகழ்வுகள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உள்ளது. அதனால் கள்ளச்சாராய சாவுக்கு திமுக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதி திமுக எம்எல்ஏக்களும்  பதவி விலக வேண்டும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களிலும் திமுக அரசுமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடுஅரசின் சட்டத்துறைஅமைச்சர் ரகுபதி,  திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு இனி வரும் நாட்களில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக இருக்கும் என்று கூறியவர்,  கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும், சிபிசிஐடி விசாரணையே போதும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். மேலும் தூத்துக்குடி சம்பவத்தில் நாங்கள் ஏன் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டோம் என்றால் அன்றைக்கு நடந்த சம்பவத்தை மூடி மறைத்தனர் என்றும் விளக்கம் அளித்தார்.

40க்கு 40 தொகுதிகளிலும் தோல்வியை கண்டுள்ள காரணத்தினாலேயே, சட்டமன்றத்தில் எதாவது பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி சட்டமன்றத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்றத்தில் எங்களை பேச வாய்ப்பு தரவில்லை என்று எடப்பாடி சொல்கிறார். அவர்கள் வெளிநடப்பு செய்த பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் கருத்தை கேட்க மீண்டும் சபைக்கு வருவதற்கு சபாநாயகரிடம் அனுமதி கேட்டவர் தான் முதல்வர் ஸ்டாலின். அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பொய் கூறி வருகிறார்.

நாங்கள் எதிக்கட்சியாக இருக்கும் போது எங்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். 2 நாட்கள் 3 நாட்கள் சஸ்பெண்ட் செய்தார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியினரையும் மதிக்கக் கூடியவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார். கேள்வி நேரத்தில் விவாதிக்க முடியுமா?: ஜீரோ நேரத்தில் அவையை ஒத்தி வைத்து விவாதிக்கலாம். ஆனால் அது சட்டப்பேரவை தலைவர் விருப்பத்தை பொறுத்தது. ஜிரோ நேரத்தில் சொல்லலாம். ஆனால் இவர்கள் கேள்வி நேரத்தின் போதே இதை விவாதிக்க கூறி கேட்டார்கள் என்றால் கேள்வி நேரம் முடிந்த பிறகு ஜீரோ நேரத்தில் அதாவது கேள்வி இல்லாத நேரத்தில் அவையை ஒத்தி வைத்து இதைப்பற்றி விவாதிக்கலாம். ஆனால் கேள்வி நேரத்தின் போது இது கிடையாது. எனவே வேண்டும் என்றே கேள்வி நேரத்தின் போது பிரச்சினையை கிளப்பினார்கள் என்றால் இங்கே கலாட்டா செய்யவே அவர்கள் முயற்சிக்கின்றனர்.

அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்று அவர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அது தான் அவர்கள் கேள்வி நேரத்தின் போது செய்த கலாட்டா. அப்போதும் அவர்களை பேச அனுமதித்தோம். சபாநாயகர் அவர்களை பேச அனுமதித்தார் என்றார்.

பின்னர் அதிமுக, பாஜகவினர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக  சிபிஐ விசாரணை கோருகிறார்களே என்ற கேள்விக்கு, அரசு ஏற்கனவே நீதியரசர் கோகுல்தாஷ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றவர்,  தமிழ்நாட்டில்,  இதுபோன்ற சம்பவத்திற்கு இனி இடம் தரமாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில், இதற்கு முன்னாடி இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. பண்ருட்டியில் ஒரு சம்பவம் நடந்துச்சு. அன்னைக்கு சிபிஐ விசாரணை போட்டாங்களா, சிபிசிஐடி போட்டாங்களா? ஆணையம் அமைத்தார்களா?.. ஆனால் இன்று இந்த சம்பவத்தில் உடனடியாக சிபிசிஐடி விசாரணை, நீதியரசர் கோகுல்தாஷ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி ஆட்சியின்போது  தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவத்தில் நாங்கள் ஏன் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டோம் என்றால் அவர்கள் உண்மையை மறைத்தார்கள். சாத்தான்குளம் சம்பவத்தில் அவர்கள் போலீஸ் தரப்பில் நடந்த சாவு இல்லை. பெனிக்ஸ் மூச்சுத்திணறலால் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல்நலன் பாதிகப்பட்டு இறந்தார் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி அறிக்கை வெளியிட்டார். அதனால் தான் நாங்கள் அன்றைக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொன்னோம்.  அவர்களது சாவையே மறைத்தார்கள். அதனை அன்றைய முதலமைச்சரே மறைத்தார். அதனால் தான் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லையே. அனைத்தையும் வெளிப்படையாக நாங்கள் சொல்லிவிட்டோம். உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விட்டது என்றார்.

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “மாவட்ட ஆட்சியரே ஒரு பொய்யான தகவலை சொன்னால் எப்படி ஒரு நபர் ஆணையத்தில் மட்டும் உண்மை கிடைக்கும். ஏழை மக்களுக்கு உண்மை விவரம் தெரிய வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. திமுக கவுன்சிலர்கள் 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக அந்த ஊர் மக்களே தெரிவித்தனர். முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்படி இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் அரங்கேறுகிறது என்றால் இது ஆட்சியின் கையாலாகாதத்தனம். எனவே இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கவேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.