சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை மக்களின் வசதிக்காக சென்னை தீவுத்திடல் வளாகத்தில் பட்டாசு விற்பனை நவம்பர் 6ந்தேதி தொடங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பட்டாசுகள் விற்பனை மற்றும் பட்டாசு வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பட்டாசு விற்பனைக்காக தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடல் போன்ற பல்வேறு மைதானங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டும் சென்னை நகரின் முக்கிய பகுதியான தீவுத்திடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்பட இருப்பதாகவும், கடைகள் அமைப்பதற்கான ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளதாகவும் தீவுத்திடல் பொருட்காட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுவாக 80 கடைகள் வரை அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு இந்த ஆண்டு 6 மீட்டர் இடைவெளியில் கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், 30 முதல் 40 வரையிலான கடைகள் மட்டுமே அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கான ‘டெண்டர்’ வருகிற 1-ந் தேதி இறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளர்.
மேலும், பட்டாசு வாங்க வரும் பொதுமக்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதுடன், முக கவசம் அணியாமல் வருவோர் தீவுத்திடல் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் பட்டாசு கடைகள் அமைந்திருக்கும் வளாகத்துக்கு வரமுடியும். இதுமட்டுமின்றி மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ‘ஹோல்டிங் பாயிண்ட்’ என்ற தனி இடம் அமைக்கப்பட இருப்பதாகவும், அங்கு பொதுமக்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டு, குறிப்பிட்ட அளவிலான நபர்கள் மட்டுமே கடைகளுக்கு சென்றுபட்டாசு வாங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தீவுத்திடலில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை, இதுதொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என கூறிய அதிகாரிகள்,
இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை பட்டாசு கடைகள் செயல்பாட்டில் இருக்கும். கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.