சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, ஏற்படும் பட்டாசு விபத்து காரணமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடித்தல் காரணமாக பலர் தீக்காயங்களுக்கு ஆட்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சிறப்பு தீக்காய வார்டை மருத்துவமனை டீன் வசந்தாமணி அமைத்துள்ளார். தீக்காயங்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பதற்கான உரிய ஏற்பாடுகளும், வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன. 10 படுக்கைகள் கொண்ட இந்த வார்டில் 3 டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று ஷிப்டுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தாமணி, தீக்காய சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், வசதிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பட்டாசு வெடிப்பது தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருவதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்தால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வரிசையில் நிகழாண்டும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் நேரிடாது என நம்புகிறோம்.
பொதுமக்கள் திறந்த காற்றோட்டமான இடத்தில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். ராக்கெட் போன்ற பட்டாசுகளை நேர்நிலையில் வைத்துதான் வெடிக்க வேண்டும். வெடித்த பட்டாசு குச்சிகளை மண் நிறைந்த வாளியில் போட வேண்டும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம்.
மேலும், பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால், உடனே தீக்காயம் பட்ட இடத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எரிச்சல் குறையும் வரை நீரில் வைத்திருக்க வேண்டும். ஐஸ்கட்டி வைக்கக்கூடாது. மஞ்சள், காப்பிதூள், மை, மாவு போன்றவற்றை தீப்புண் மேல் போடக்கூடாது. அத்துடன் தீயினால் கருகி உடலில் ஒட்டியிருக்கும் எரிந்த துணையை வெட்டி எடுக்க வேண்டும். கொப்பளங்களை உடைக்கவோ சுயமாக மருத்துவமோ செய்யக்கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.