சென்னை:

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தனிக்கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ளதின் பின்னணியில் ஆளும் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, “எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை” என்ற அமைப்பை சமீபத்துல் துவங்கினார். பேரவை துவங்கப்பட்டதில் இருந்தே பலவித சர்ச்சைகள் ஏற்பட்டன.  ஒரு சிலரை கட்சி நிர்வாகிகளாக தீபா அறிவிக்க, அவரது கணவர் மாதவன் வேறு சிலரை நிர்வாகிகளாக அறிவித்தார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு மாதவன் வந்து ஆஞ்சலி செலுத்தினார். அதன்  பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனிக்கட்சி  துவங்குவதாக அறிவித்தார். “தீபா நடத்துவது பேரவை. நான் துவங்கப்போவது கட்சி.

இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி பெயரை அறிவிப்பேன். தீபாவைச் சுற்றி தீய சக்திகள் உள்ளன. எனக்குத்தான் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது” என்று மாதவன் தெரிவித்தார். அப்போது அவர், தீபாவுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், மாதவனின் தனிக்கட்சி அறிவிப்புக்குப் பின்னணியில் ஆளும் கட்சி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

“சட்ட ரீதியாக ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என்று தீபா தெரிவித்து வருகிறார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும்  அவர் அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே அவரை ஆளும் (சசிகலா) தரப்பு தொடர்புகொண்டு பேசிவந்தது. தீபாவின் எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது. ஆனாலும் பேச்சுவார்த்தையை அவர் முறித்துக்கொள்ளவில்லை.

அதனால்தான், ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோதும் அவரது சட்டப்படியான வாரிசு என சொல்லிக்கொள்ளும் தீபா நீதிமன்றத்தை நாடவில்லை. பொதுவெளியில் மட்டும் பேசி வந்தார்.

இடையில்  ஆளும் தரப்பில் இருந்து அவருக்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அப்போதுதான் அவர், ஜெ. மரணத்தில் மர்மம் இல்லை என்று ஒரு முறை பேசினார்.

தொடர்ந்து நடந்த பேர பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆகவே மறுபடி ஜெ. மரணத்தில் மர்மம் என்று பேச ஆரம்பித்தார்.

இந்த நிலையில், பேரவை துவங்கினார். ஆர்.கே நகரில் போட்டியிடப்பவதாகவும் அறிவித்தார்.

இதற்கிடையே பேரவையில் நிர்வாகிகளை நியமிப்பதில் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது.

இதைப் பயன்படுத்திக்கொண்ட ஆளும் தரப்பு, மாதவனுக்கு தேவையானதை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தது. அவரது  எதிர்பார்ப்புகளும் ஆளும் தரப்பு ஏற்கும் வகையில் இருந்தது.  இதையடுத்தே ஆளும் தரப்பில் இருந்து மாதவனிடம் பேசி வரும் முக்கிய புள்ளி, புதிய கார் ஒன்றை மாதவனுக்கு அளித்திருக்கிறார்.

தனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக தீபா சொல்வதையே ஏற்க முடியாது. இப்போது மாதவனும் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இந்த வார்த்தைகளில் அவருக்கே நம்பிக்கை இருக்காது.

அவரை வைத்து தீபாவுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதே ஆளும் தரப்பின் நோக்கம். அது நிறைவேற ஆரம்பித்திருக்கிறது” என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.