ர்மபுரி

ன்னை ஜெயலலிதாவின் மகள் என சொல்லிக் கொள்ளும் அம்ருதா மீது வழக்கு தொடுக்கப் போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறி உள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த 37 வயதான அம்ருதா என்னும் பெண் தான் ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் என உச்சநீதிமன்றத்தில் மனு அளித்ததும் அது தள்ளுபடி செய்யப்பட்டு அவரை பெங்களூரு உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிடப் பட்டதும் தெரிந்ததே.  அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தற்போது தன்னை ஜெயலலிதாவின் வாரிசு என சொல்லிக் கொண்டு வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தீபா தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது தீபா, “அம்ருதா என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது.  அவர் ஒரு மோசடிக்காரர். எனக்கு என் தந்தையின் உறவினர்கள் மற்றும் தாயின் உறவினர்கள் அனைவரையும் தெரியும்.  அவர்களில் அம்ருதா என்னும் பெயரில் யாரும் கிடையாது.  நான் அவரை டிவிக்களில் மட்டுமே தற்போது பார்த்துள்ளேன்.

இது முழுக்க முழுக்க சசிகலாவின் குடும்பத்தாரின் சதித்திட்டம் என நான் சந்தேகிறேன்.  எனது அத்தை ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இது போல அந்த மன்னார்குடி குடும்பம் செயல்பட்டு வருகிறது.  அம்ருதா தன்னை ஜெயலலிதாவின் மகள் என சொல்லிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில் அவர் மீது ஜெயலலிதாவின் நற்பெயரைக் களங்கம் செய்ய முயன்றதாக வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளேன்.

கடந்த 2002ஆம் வருடத்தில் இருந்தே பல போலி உறவினர்களை உருவாக்கி சசிகலாவின் குடும்பத்தினர் எங்கள் குடும்பத்தில் குழப்பம் விளைவித்து அவர்கள் ஜெயலலிதாவின் வாரிசாக திட்டமிட்டுள்ளனர்.  இது நிச்சயம் நடக்காது.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கியது குறித்தும் எனக்கு பல கேள்விகள் உள்ளன. இதை நான் ஆட்சேபிக்கிறேன்” என கூறி உள்ளார்.  தேர்தல் கமிஷன் தீபாவை அதிமுக வின் உறுப்பினரே இல்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.