எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து இன்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை நேரில் சந்தித்து தீபாவின் கணவர் மாதவன் வாழ்த்து தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்னை அழைத்து முதல்வர் பதவி அளித்திருக்க வேண்டும் என்று அதிரடியாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியவர் அவரது அண்ணன் மகள் தீபா.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பையும் துவங்கினார். இடையில் இவரது கணவர் மாதவன் தனியாக ஒரு கட்சி துவங்கினார். ஒரே வீட்டில் கணவர் ஒரு கட்சியின் தலைவராகவும் மனைவி இன்னொரு கட்சியின் தலைவராகவும் இருக்கும் அதிசயம் தமிழகத்தில் நடந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாதவன் திடீரென ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் திடீரென அ.தி.மு.க. தலைமையகத்துக்கு வந்தார். அங்கு இருந்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
“அ.தி.மு.க. ஆட்சி ஓராண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் இருவரையும் சந்தித்து வாழ்த்து கூறினேன்.
அ.தி.மு.க. ஆட்சியை, கட்சித் தலைவர்களை தீபா எதிர்க்கிறார். அவர் எனது மனைவியானாலும் தனி மனிதர். நான் தனி மனிதன். அரசியல்ரீதியாக நாங்கள் தனித்தனியாகவே செயல்படுகிறோம். எனது இயக்கம் சார்பாக நான் அ.தி.மு.க. தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
இது குறித்து தீபா என்ன நினைக்கிறார் என்பதை அவரிடம்தான் ஊடகத்தினர் கேட்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.