சென்னை:
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோர் வாரிசுதாரர்கள் என்றும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக தமிழகஅரசின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக சென்னை போயஸ்கார்டன் இல்லம் உள்பட பல்வேறு சொத்துக்கள் தமிழகம் மற்றுமின்றி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் உள்ளன. ஜெ.வுக்கு வாரிசு இல்லாததால், அவருடைய பல கோடி சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு ஜெ.வின் சொத்துக்களை நிர்வாகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து, இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக கூறியது.
அதன்படி, இன்று காலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகி வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா சட்டப்படி, இரண்டாம் நிலை வாரிசுகள் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.
ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா மற்றும் தீபக் உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து தமிழகஅரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் முதல்வரின் அலுவலகமாக மாற்றலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel