சென்னை: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று, அடுது்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவெடுத்துள்ளது. இது இன்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 72 முதல் 90 மணி நேரத்தில் அதாவது ஜனவரி 10ம் தேதியன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் தெரிவித்துள்ளது.
நாளை 08-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுதினம் 09-01-2026: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அன்று மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி. 10 அன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி . 11 அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]