சென்னை
பள்ளி வளாகங்களில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதா? என ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. பள்ளி வளாகங்களில் உள்ள கிணறுகள் மற்றும் குழிகளை உடனே மூட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2வயது குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பயன்பாட்டில் இல்லாத ஆழ் துளைக் கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்டந்தோறும் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, பள்ளி வளாகங்களில் உள்ள கிணறுகள், குழிகள், ஆழ்துளைக் கிணறுகள் குறித்த ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், அவர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதில், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி வளாகங்களில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆழ் துளைக் கிணறுகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியவற்றைக் கண்ட றிந்து உடனே அதை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மூடிய இடங்களை சிறப்பு எச்சரிக்கை குறியிட்டு அனைவருக்கும் தெரியும்படி அடையாளப்படுத்த வேண்டும். மேலும், ஏரி, குளம், கிணறு, ஆழ்துளைக் கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுதவிர, பள்ளிகளில் இருக் கும் தேசிய பசுமைப் படை போன்ற இயக்க மாணவர்கள் மூலம் சுற்றுப் புறக் கிராமங்களில், பயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி களை நடத்த வேண்டும். இதுகுறித்து எடுக்கப்பட்ட பணி விவரங்களை அறிக்கையாக அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.