கோவை,
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு காரணமாக இளைஞர் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அந்த பகுதி மக்கள், இளைஞர் ரகு இறந்த ரோட்டில், ரகுவின் மரணம் குறித்து, ரகுவை கொன்றது யார்? என்று எழுதி வைத்திருந்தனர்.
தற்போது அந்த எழுத்தை அரசு தரப்பினர் வெள்ளையடித்து மறைத்து உள்ளனர். அரசு தரப்பினரின் இந்த சுறுசுறுப்பு குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையிலும் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட அரசு அதிகாரிகளும், அதிமுகவினரும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்திலிருந்து வ.உ.சி மைதானம் வரை கோவை-அவிநாசி சாலையில் பெரிய அளவிலான அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரகு, சாலையை ஆக்கிரமித்திருந்த அலங்கார வளைவில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரகு, அமெரிக்காவில் பணிபுரிந்துவந்துள்ளார். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ரகு, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, விபந்து நடந்த இடத்தில், ரகுவை கொன்றது யார்? என்று எழுதி வைத்திருந்தனர்.
இந்த விபத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரோட்டில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்தை அரசு தரப்பினர் வெள்ளையடித்து, அரைகுறையாக மறைத்துள்ளனர்.
அரசு இவ்வளவு வேகமாக செயல்பட்டு, அந்த எழுத்தை மறைத்தது மீண்டும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த விசயத்தில் மட்டும் இவ்வளவு வேகமாகவும், ஆர்வமாகவும் வேலை செய்யும் அரசும், அதிகாரிகளும், மற்ற செயல்களிலும் இதுபோன்று ஆர்வமுடன் வேகமாக செயலாற்றினால் தமிழ்நாடு வளம் பெறும், நலம்பெறும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அரசு வெள்ளையடித்து எழுத்தை மறைத்துள்ள படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.