சென்னை:
உள்நாட்டு உற்பத்தியில் சரிவு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘முதலாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.7 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய காலாண்டைக் காட்டிலும் இது 0.4 சதவீதம் ஆகும்.
2016-17ம் ஆண்டு காலாண்டில் 7.9 சதவீதமாக ஜிடிபி இருந்தது. பணமதிப்பிழப்பு அறிவிப்பால் இந்த அளவு சரிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. உற்பத்தியும் குறைந்துள்ளது. குறைந்த முதலீடு, வேலை இல்லா திண்டாட்டம் போன்றவை தான் இதற்கு காரணம்.
ஜிடிபி தொடர்பான புள்ளி விவரங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் முன்வைத்த ‘‘மிகப் பெரிய தவறான நிர்வாகம்’’ என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக உள்ளது. ஜிடிபி ஒரு சதவீதம வீழ்ச்சியை சந்தித்தால் ரூ1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். 2 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டால் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.