சென்னை: கோடை விடுமுறை வருவதால், செனையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு என மொத்தம் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக விமான இயக்குனரம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது 10ம் வகுப்பு மற்றும் இடைநிலை, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதத்துக்குள் முடிவடைய உள்ளது. இதனால், கோடை விடுமுறையை கழிக்க பலர் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதன் காரணமாக, மக்களின் கூட்டத்தை சமாளிக்க 206 சிறப்பு விமானங்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, நாளொன்றுக்கு சுமாா் 50,000- ஆக இருந்து வந்த சென்னை விமான நிலையப் பயணிகளின் எண்ணிக்கை, தற்போது 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை உயா்ந்து கொண்டிருக்கிறது. இதனால், தற்போது இயக்கப்பட்டு வரும் வழக்கமான விமானங்களுடன் கூடுதலா 206 சிறப்பு விமானங்களை இயக்க விமான இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி கோடை விடுமுறை காலத்தில், வழக்கமான விமானங்களுடன் கூடுதலா 42 சா்வதேச விமானங்களும், 164 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்படவுள்ளன. இதன்மூலம் பயணிகள் தங்கு தடையின்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.