சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவி வருவதால், சென்னையில் 1தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த சென்னை மாநகராட்சி செய்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடை வெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவையே சிறந்த தீர்வு என கூறியுள்ள மாநகராட்சி, தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள குறிப்பிட்ட 10 மண்டலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மரபியல் மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றின் ஒமைக்ரான் வகை தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மண்டல நல அலுவலர் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் மணிஷ் ஐஏஎஸ், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 15 நாட்களில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்த நபர்கள் என 2,16,808 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடை வெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் ஆகியவையே சிறந்த தீர்வு.
குறைவாக கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள குப்பம், சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள திலகர் நகர், சுனாமி குடியிருப்பு, பி.கல்யாணபுரம்,
ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டான்லி நகர், கனால் காலனி, பெரியபாளையத்தம்மன் கோயில், பழைய அமராஞ்சிபுரம், ஆசீர்வாதபுரம்,
திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள புளியந்தோப்பு, அன்னை சத்யா நகர், காமராஜர் தெரு, சிவசக்தி நகர்,
அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள கொரட்டூர், கள்ளிக்குப்பம்,
அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள வில்லிவாக்கம்,
தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள பி.எம்.தர்கா, நடுக்குப்பம், நொச்சிக்குப்பம், ரோட்டரி நகர், அயோத்தியா நகர், மயிலாப்பூர்,
கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள ராணி அண்ணாநகர், சூளை பள்ளம், கோதைமேடு,
அடையாறு மண்டலத்தில் உள்ள ஆதம்பாக்கம், தரமணி,
பெருங்குடி மண்டலத்தில் உள்ள கல்லுக்குட்டை
ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற 26-ந்தேதி அன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமினை கண்காணிக்க 3 மண்டலங்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் என 15 மண்டலங்களுக்கு துணை ஆணையாளர் (சுகாதாரம்), மாநகர நல அலுவலர், மாநகர மருத்துவ அலுவலர், கூடுதல் மாநகர நல அலுவலர் மற்றும் கூடுதல் மாநகர மருத்துவ அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.