இன்று எம்ஜிஆர் நினைவு நாள்.

தமிழக மக்களின் வேதவாக்காக திகழ்ந்த எம்.ஜி.ஆர் என்ற புரட்சி நடிகர், முன்னாள் தமிழக முதல்வர்  மறைந்த தினம் இன்று.

எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் என்றும் பேசப்பட்டு வருகிறது. காரணம்,  உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்.

சினிமாவின் மூலம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த அவர், அரசியலிலும் தனது முத்தி ரையை பதித்து சென்றிருக்கிறார்.  எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்கள் இன்றளவும் அவரை போற்றி வருவதுபோல, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்…’ என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.

அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலை யில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், ‘டிவி’ மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, ‘டிவி’யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.
பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது.

இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்து வதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்றளவும் அவரது திரைப்படங்கள்  மவுசு குறையாமல் தியேட்டர்களில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!

எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.

எம்ஜிஆர் ஆட்சியின் சாதனைகள்

தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், தான் ஆட்சிக்கு வந்ததும், பள்ளிக்குழந்தைகள் பசியால் வாடக்கூடாது என்று,  சத்துணவு திட்டத்தை விரிவு படுத்தினார்.  இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத வகையில்  முதலமைச்சர் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார்.

காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டத்தை செம்மைப்படுத்தி,  ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் 2 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் மதியம் ஒரு வேளை பள்ளிகளிலேயே சமைத்து வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, சத்துணவுக் கூடங்களில் உணவு சமைத்து பரிமாற ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ.100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது.

பெண்களின் வேலையில்லாத்த் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந்தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ.200 கோடி யாகும்.மக்கள் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்படிருந்த போதிலும் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார்.

அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்தார். ஒரு கிலோ அரிசியை இலவசமாகவும் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

சென்னை நகருக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசுகளாலும், மக்களாலும் பேசப்பட்டு வந்தது.

1983 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர், ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவுடன் கலந்து பேசி நனவாக்கினார். அதற்கான தொடக்க விழாவைப் பிரதமர் இந்திராகாந்தி, என்.டி.ஆர். ஆகியோரை சென்னைக்கு அழைத்து விழாவை நடத்தினார்.

இலவச காலணி, இலவச வேலை வாய்ப்பு வழங்கினார். நாட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், வீட்டு வசதி, திருமண நிதி உதவி, நதி நீர் திட்டம், 20 அம்சத் திட்டம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, தொழிலாளிகளுக்கு உதவி, அரிசி விலை குறைப்பு போன்ற திட்டங்களை நடைமுறை படுத்தினார்.