சென்னை;  தமிழ்நாடு சட்டப்பேரவையில்,  உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே  காரசார விவாதம்  நடைபெற்றது. இதையடுத்து பதில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டம் கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்படுவதாக  கூறினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் கூறும் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த   விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திண்டுக்கல் சீனிவாசன் உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் பயன்பெற்று உள்ளனர் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் 57 எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கட்சி பாகுபாடு இன்றி அந்த திட்டம் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு நிதி அதிகமாகும் என்ற காரணத்தை கூறி திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறார்கள்.

இந்த திட்டத்தின்கீழ்,  10 திட்டங்களை  செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால்  அதிகாரிகள் 2 திட்டங்கள்தான் எடுத்துக் கொள்கிறார்கள். நானும் எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன். அதில் 2 பணிகளை மட்டும் எடுத்து உள்ளனர். மற்றவற்றை சாத்தியம் இல்லை என கூறி நிராகரித்து உள்ளனர்.

எனவே எம்.எல்.ஏ.க்கள் கூறும் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க அரசு  முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்து  பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,  உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு நானே இந்த திட்டத்தை ஆய்வு செய்து அறிவுரைகள் கூறி வருகிறேன். உங்கள் தொகுதி முதல்வன் திட்டத்தின் கீழ் எந்த கோரிக்கையும் வைக்காத எம்.எல்.ஏ.க்களிடம் திட்டங்களை கேட்டு பெற்று செயல்படுத்தி வருகிறோம்.

உதாரணத்திற்கு அ.தி.மு.க. உறுப்பினர் விஜயபாஸ்கர் அந்த திட்டத்தில் எதுவும் கேட்கவில்லை. ஆனால் என்ன தேவைகள் உள்ளது என்று நாங்களாகவே கேட்டு உள்ளோம். இப்படி சாத்தியப்படும் பணிகள் அனைத்தையும் உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றிக்கொண்டு தான் இருக்கிறோம்.

இவ்வாறு பதில் அளித்தார்.