சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, 12வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திருத்த மசோதாவில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் மற்றும், 18வயதுக்குப்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு 10 ஆண்டுகள் குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் திமுக அரசுமீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சமீபத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், அண்ணாநகர் சிறுமி பாலியல் பலாத்காரம், கொங்குமண்டலத்தில் நடைபெற்ற இளம்பெண் பாலியல் வன்புணர்வு போன்ற சம்பவங்கள் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் அதிகரித்து வரும் போதை பொருள் நடமாட்டம் என்றும், மதுக்கடைகள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மீது, காவல்துறைமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவையில் பெண்கள்மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கும் வகையில், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.
ஏற்கெனவே பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், அந்த தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளத கூறிய முதலமைச்சர், இந்த மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு திமுக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரக்கூடிய அரசாக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம். இதன்மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது.
இத்தகைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாகவும், அதிகமான சமூகப் பங்களிப்பு செய்யும் மாநிலமாகவும் தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதில் உறுதியோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டுக்கும் மேலான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது யாராலும் மன்னிக்கமுடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.
இந்த வகையில் BNS சட்டத்தின் கீழும், நமது மாநில அரசின் சட்டங்களின் கீழும், ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது.
இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவதற்காக BNS மற்றும் BNSS சட்டங்களின் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998-ம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும், சட்ட முன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன்.
அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்,
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு மசோதாவில், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு 10 ஆண்டுகள் குறையாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுபோல, காவல்துறை ஊழியர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் குறையாத தண்டனை வழங்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
18 வயதுக்குப்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை உள்பட பல கடுமையான தண்டனைகள் இடம்பெற்றுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு . ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களையும் தண்டனையையும் கடுமையாக்கும் வகையில் மசோதாவில் ஷரத்துக்குள் இடம்பெற்றுள்னன. மேலும், குறிப்பிட்ட சில குற்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்படும்போது, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், அதில் தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாட பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.