லண்டன்:
கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் ஐரோப்பா நாடுகளை தாக்கியுள்ளது. பனி உரைவு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுவிட்சர்லாந்து ஜெனிவா விமான நிலையம் மூடப்பட் டுள்ளது. ஓடு தளங்களில் படிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பா நாடுகளின் வடக்குப் பகுதி முதல் தெற்கில் உள்ள மெடிட்டேரனியன் கடற்கரை வரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கத்தை விட பனிப்புயலின் தாக்குதல் இந்த ஆண்டு அதிக அளவில் உள்ளது. இதனால் பல சாலைகள் முடங்கியதால் வாகனங்களில் டிரைவர்கள் ஆங்காங்கே தனித்து நின்று தவித்து வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவின் தாக்குதல் இன்னும் ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் அறிவித்துள்ளன.
இந்த பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போலாந்து பெரிஷத்தில் மேலும் 3 பேர் இறந்துள்ளனர். செக் குடியரசில் 6 பேர் இறந்துள்ளனர். லூதியானாவில் 5 பேர் இற ந்துள்ளனர். ஃப்ரான்ஸ் மற்றும் ஸ்லோவகியாவில் தலா 4 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் 3 பேரும், இத்தாலி, செர்பியா, ரொமேனியா, ஸ்லோவேனியாவில் தலா 2 பேரும், பிரிட்டன், நெதர்லாந்தில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
இந்த பாதிப்பு குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ இந்த பாதிப்பால் முதியவர்கள், குழந்தைகள், நாட்பட்ட நோய் உள்ளவர்கள், உடல் மற்றும் மன குறைபாடு உள்ளவர்களுக்கு குளிர் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஏழைகள், வீடு இல்லாதவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.