டெல் அவிவ்:

சவுதி அரேபியா வான் பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் பறக்க உதவுமாறு சர்வதேச அமைப்புக்கு இஸ்ரேல் விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா&இஸ்ரேல் உறவு காரணமாக சவுதி வான் எல்லைக்குள் இஸ்ரேல் விமானங்கள் பறக்க கடந்த 70 ஆண்டுகளாக அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து இஸ்ரேல் நகரமான டெல் அவிவுக்கு நேரடி விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானங்கள் சவுதி வான் பகுதி வழியாக பறந்து டெல் அவிவ் விமானநிலையத்தை அடையும் என கூறப்படுகிறது. இதற்கு சவுதி அரசிடம் ஏர் இந்தியா அனுமதி பெற்றுள்ளதா? என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஏர் இந்தியாவுடன் போட்டியிடும் வகையில் இந்த குறைவான தூரம் கொண்ட வழித்தடத்தை பயன்படுத்திக் கொள்ள சவுதி அரசிடம் அனுமதி பெற உதவ வேண்டும் என்று இஸ்ரேல் விமான நிறுவனமான ‘இஎல் ஏஎல்’ சிஇஒ உசிஸ்கின், சர்வதேச வான் போக்குவரத்து சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிடமும் இதற்கு முயற்சி செய்ய வலிறுத்தப்பட் டுள்ளது என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சங்கத்தில் 120 நாடுகளில் 280 விமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் விமானம் வாரத்தில் 4 விமானங்களை மும்பைக்கு இயக்கி வருகிறது. சவுதி வான் வழியாக வ ந்தால் இதற்கு 5 மணி நேரமாகும். தடை காரணமாக எத்தியோப்பியா வழியாக இந்திய கிழக்கு பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் வருவதால் பயண நேரம் 7 மணி நேரம் ஆகிறது. இதனால் பயண கட்டணம் அதிகரிக்கிறது. சவுதி வழியாக வந்தால் செலவு குறையும் என்று அந்நிறுவனம் கணக்கீடு செய்கிறது.

இஸ்ரேல்&இந்தியா இடையிலான விமான போக்குவரத்து தொடங்குவது குறித்து ஏர் இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் இந்த விமான போக்குவரத்து தொடங்கப்பட்டால் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.