சென்னை: சென்னை அருகே கூவம் ஆற்றில்  டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கூவம் ஆறு விஷத்தன்மையாக மாறி உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதியில் ஓடும் கொசஸ்தலை ஆற்றில் கடந்த வாரம் ஏராளமான மீன்கள் செத்து மிதந்த நிலையில், தற்போது சென்னையில் ஓடும் கூவம் ஆற்றிலும் மீன்கள் செத்து மிதப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விதிகளை மீறி, திருட்டுத்தனமாக தொழிற்சாலைகளில் இருந்து விடப்படும் கழிவு நீர் காரணமாக கூவம் ஆறு மாசடைந்து போயுள்ளதால், மீன்கள் செத்து மிதப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில், கொசஸ்தலை ஆறு செல்லும், சென்னை புறநகர் பகுதிகளான  அத்திப்பேட்டை புதுநகர் பகுதி,  எண்ணூர் மற்றும் புலிகாட்டில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தன. இந்த மீன்கள் இறப்பு காரணமாக,  என்னூர் அனல் மின் நிலையங்களில் இருந்து ஆற்றில் குளிரூட்டும் நீரை விடுவிப்பதாலோ அல்லது நகரத்திலிருந்து வெளியேறும் கழிவுநீராலோ காரணமாக இருக்கலாம் என மாசு ஆய்வாளர்கள் கூறி வந்தனர். ஆனால், அந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள், மாசடைந்த நீரை திருட்டுத்தனமாக ஆறுகளில் திறந்து விடுவதே, மீன்கள் இறப்பு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஓடும் கூவம் ஆற்றிலும் டன் கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன. சென்னையை ஒட்டிய  திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் கூவம் ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தது இதனால் இந்த பொதுமக்கள் திருவேற்கச்டு நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் திருவேற்காடு நகராட்சி ஊழியர்கள் கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

 கூவம் ஆற்றில் நச்சு கலந்த தண்ணீர்  கலக்கப்பட்டதால் இந்த மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது.