கொழும்பு: இலங்கையின் 15வது பிரதமராக தினேஷ் குணவர்தன பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  இவர் இலங்கை அதிபர் ரணிலின் வகுப்பு தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய பிரதமர் டிசிஆர் குணவர்தனாவின் பெற்றோர் பிலிப்ஸ் மற்றும் குசுமா வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர். இவரது தந்தை அமெரிக்காவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் வி.கே.கிருஷ்ண மேனன் ஆகியோரின் வகுப்புத் தோழர்.

இலங்கையில் நடைபெற்ற ராஜபக்சேக்களின் குடும்ப ஆட்சி காரணமாக, அந்நாடு  வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்த, அதிபர், பிரதமர், அமைச்சர் என அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, ராஜபக்சேக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனால், அவரையும் ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 3 பேர் களமிறங்கிய நிலையில், ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெற்று லங்கையின் 9வது அதிபராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, இலங்கையின் 15வது பிரதமராக இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கை அரசியல்வாதியான தினேஷ் குணவர்தன கடந்த 1983ம் ஆண்டு முதல்முறையாக இலங்கை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1994 தேர்தலில் அவர் தோல்வி அடைந்து இருந்த போதிலும், 2000 முதல் தொடர்ச்சியாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 73 வயதாகும் தினேஷ் குணவர்தன கடந்த காலங்களில் பல்வேறு துறைகளில் முக்கிய அமைச்சராகவும் இருந்தவர். மேலும் இலங்கை புதிய அதிபர் ரணினில் வகுப்பு தோழர் என்ற பெருமைக்கும் உரியவர்.

தினேஷ் குணவர்தன பெற்றோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது, குணவர்தனாவின் பெற்றோர் பிலிப்ஸ் மற்றும் குசுமா ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவரது தந்தை அமெரிக்காவில் படிக்கும்போது, இந்திய தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் வி.கே.கிருஷ்ண மேனன் ஆகியோரின் வகுப்புத் தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.