சென்னை
தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு ஊர்டங்கில் பல தளர்வுகள் அறிவித்துள்ளது. சமீபத்தில் வார இறுதி நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்னும் அரசின் அறிவிப்பு மக்களை மகிழ்வில் ஆழ்த்தியது.
நாடெங்கும் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே ஊரடங்கில் கூடுதல் தளர்வு மற்றும் கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நாளை மறுநாள் காலை சென்னை தலைமை செயலகத்தில் 11.30 மணிக்கு முதல்வர் மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் பண்டிகை காலம் குறித்த கூடுதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.