சிட்னி: நிறவெறி வசைபாடல் தொடர்பாக, முகமது சிராஜ் மற்றும் இந்திய அணிக்கு தனது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்.
இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர், சிட்னி டெஸ்ட் போட்டியில், பவுண்டரி எல்லைக்கு அருகே பீல்டிங் செய்தபோது, மூன்றாவது மற்றும் நான்காம் நாளில் நிறவெறி வசைபாடல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்கள்.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிசிசிஐ மற்றும் ஐசிசி உள்பட, உலகின் பல இடங்களிலிருந்து இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இந்நிலையில், டேவிட் வார்னர் கூறியுள்ளதாவது, “முகமது சிராஜ் மற்றும் இந்திய அணியிடம் நான் வருத்தம் தெரிவிக்க விரும்புகிறேன். நிறவெறி மற்றும் துஷ்பிரயோகமானது எந்த இடத்திலும், எப்போதும் ஏற்கத்தக்க ஒன்றல்ல. எங்கள் ரசிகர்கள், வரும் நாட்களில் இன்னும் நல்லமுறையில் நடந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றுள்ளார் அவர்.