சிட்னி

ஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை ஒட்டி பதவி விலகிய அணியின் துணைத்தலைவர் டேவிட் வார்னர்  ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் பந்தயத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தொலைக்காட்சி வீடியோ பதிவின் மூலம் வெளியாகியது.   அதையொட்டி கிளம்பிய சர்ச்சையினால் வீரர் பான்கிராப்ட், அணித்தலைவர் ஸ்மித் மற்றும் அணியின் துணைத்தலைவர் டேவிட் வார்னர் ஆகியோர் பதவியில் இருந்து விலகி உள்ளனர்.

நடைபெறும் கிரிக்கெட் தொடரின் இடையே ஆட்டத்தை விட்டு இடையில் விலகிய டேவிட் வார்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.   அவர், “ஆஸ்திரேலியா மற்றும் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் :  நான் இப்போது சிட்னியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறேன்.    கிரிக்கெட்டை சேதப்படுத்தும் அளவுக்கு தவறுகள் நிகழ்ந்துள்ளன.   நான் எனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.    அத்துடன் தவறுக்கு பொறுப்பேற்று வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனால் இந்த விளையாட்டுக்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ள மனத் துயரத்தை நான் புரிந்துக் கொண்டுள்ளேன்.    நான் சிறு வயதில் இருந்தே விளையாடி வந்த விளையாட்டுக்கு ஏற்பட்டுள்ள கறையை நினைத்து வருந்துகிறேன்.  சில நாட்கள் நான் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது காலத்தை செலவழிக்க விரும்புகிறேன்.    இன்னும் சில தினங்களின் மீண்டும் நான் உங்களை சந்திக்கிறேன்”  என டிவிட்டரில் பதிந்துள்ளார்.