சென்னை: கால்பந்து வீராங்கனை உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வீராங்கனையின் தந்தை ரவி வலியுறுத்தி உள்ளார். மேலும் வீராங்கனையின் நண்பர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி நண்பர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா(17) என்பவர் காலில் காயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சையால் பிரியா உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சம்மந்தப்பட்ட மருத்துவர்களை பணிநீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதனிடையே, மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து மருத்துவத்துறை அளித்துள்ள விளக்கத்தில், அவருக்கு காலில் இருக்கமான கட்டு போட்டிருப்பதே காரணம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவியின் உடலுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரியாவின் உடலை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதனர். அப்போது, ஆத்திரமடைந்த பிரியாவின் நண்பர்கள் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தனது மகள் மரணம் குறித்து செய்தியாளர்களுக்க பேட்டி அளித்த தந்தை ரவி, தவறான சிகிச்சையால் தனது மகள் பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.. நடந்து சென்றபடி மருத்துவமனையில் சேர்ந்த தனது மகளின் மரணம் மிக கொடுமையானது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
வீராங்கனை பிரியா மறைவைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.