ராஞ்சி

கொரோனா சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்ததால் அவர் மகள் அமைச்சரிடம் ஆவேசம் கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது இரண்டாம் அலையாகக் கடுமையாக அதிகரித்து வருகிறது.   இதையொட்டி மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.  ஆனால் பல மாநிலங்களில் குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் கொரோனா வார்டுகள் நிரம்பி உள்ளதால் மருத்துவர்கள் நோயாளிகளை அலட்சியம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த அலட்சியம் காரணமாக கொரோனா நோயாளிகள் சிகிச்சையின்றி உயிரிழக்கும் அவலம் அதிகமாகி உள்ளது.  அவ்வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் நேற்று முன் தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.

ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் நோயாளியைக் கவனிக்கவில்லை.  அந்த பெண் தனது தந்தை உயிரைக்க்காக்க வேண்டும் என பல முறை மன்றாடியும் மருத்துவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.   பலமுறை அந்த பெண் கெஞ்சிய பிறகு வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பெண்ணின் தந்தையை ஒரு மருத்துவர் பரிசோதித்துள்ளார்.  ஆனால் அவர் அதறு முன்பே உயிர் இழந்துள்ளார்.

சோகத்துடன் அழுதபடி அந்தப்பெண் தந்தையின் சடலத்துடன் வெளியே வந்துள்ளார்.  அப்போது ஜார்க்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா தனது காரில் மருத்துவமனை உள்ளே நுழைந்துள்ளார்.  கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளைப் பார்வையிட வந்த அவரிடம் இளம்பெண் ஆவேசத்துடன் அருகில் சென்று கத்தி உள்ளார்.

அந்த இளம் பெண், “அமைச்சர் அவர்களே, கடந்த அரை மணி நேரமாக எனது தந்தைக்குச் சிகிச்சை அளிக்குமாறு நான் மருத்துவர்களிடம் கதறிக் கொண்டிருந்தேன்.  ஒருவரும் வரவில்லை.  நீங்கள் எல்லாம் வாக்கு கேட்டு வருகிறீர்களே தவிர எங்களுக்கு ஏதும் செய்வதில்லை” எனச் சீற்றத்துடன் கூறி உள்ளார்.   ஆனால் அதைக் கேட்ட அமைச்சர் பதிலே சொல்லாமல் காரில் மருத்துவமனை உள்ளே சென்றுள்ளார்.

இது வீடியோ பதிவாகி தற்போது பலரால் பரப்பப்படுகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=GagiJpt_sTs]