புதுடெல்லி:
பொறியியல் அம்சம், செயல்பாடு அடிப்படையில் பார்க்கும் போது, 6.54% அதிக விலைக்கே ரஃபேல் ஒப்பந்தத்த்தை மோடி அரசு செய்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 126 ரஃபேல் விமானங்கள் வாங்க பிரான்ஸின் தஸால்ட் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு,36 ரஃபேல் விமானங்களை மட்டும் வாங்க தஸால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதில் பிரதமர் மோடியின் நேரடி தலையீடு இருந்ததாகவும், முறைகேடு நடந்துள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் தலைமை கணக்கு தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:
ரஃபேல் விமானம் வாங்க முந்தைய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட, தற்போதைய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, விலை 2.86 சதவீதம் குறைவாக உள்ளது.
இந்தியாவுக்கு ஏற்றாவாறு மேம்பாட்டு அம்சங்களை கொண்ட விமானம் என்று பார்க்கும் போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் விலை17.08% குறைவாக உள்ளது.
அதேசமயம், பொறியியல் அம்சங்களுடன் கூடிய தொகுப்பு மற்றும் செயல்பாடு அடிப்படையில் பார்க்கும் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒப்பந்தத்தை விட 6.54% அதிகமான விலை உள்ளது.
பயன்படுத்த தயாராக இருந்த விமானங்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்க முன்வந்த வி¬யை விட, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் விலை 9% குறைவு என்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் வாதம் நிராகரிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் தரவேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் கோரிக்கையை பிரான்ஸ் ஏற்க மறுத்தது.
பிரான்ஸ் உத்தரவாதம் தராவிட்டால், சட்ட அங்கீகாரம் இல்லை. ஒப்பந்தத்தை தஸால்ட் மீறும் பட்சத்தில், தீர்ப்பாயத்தை மட்டுமே நாட முடியும். பிரான்ஸ் அரசை நாடமுடியாது.
இதை எல்லாம் அறிந்தும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பிரான்ஸ் உத்தரவாதம் இன்றியே ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தப்படி,தஸால்ட் நிறுவனத்துக்கு தரவேண்டிய தொகையை நிர்வகிக்க, புதிய வங்கிக் கணக்கை பிரான்ஸ் தொடங்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒப்பந்தப்படி, முதல் 18 விமானங்கள் 36-லிருந்து 53 மாதங்களுக்கும், மற்ற 18 விமானங்கள் 67 மாதங்களுக்கும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை தஸால்ட் நிறுவனம் ஒப்புக் கொண்டது.
ஆனால் பாஜக கூட்டணி அரசின் ஒப்பந்தத்தில் இதுபோன்ற உத்தரவாதம் பெறாததால், அது தஸால்ட் நிறுவனத்துக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.