உனா:
குஜராத்தில் தலித் மக்களின் போராட்டம் தொடந்து வருகிறது. இதன் காரணமாக உனா நகர் பகுதி பதட்டமாக காணப்படுகிறது.
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம் உனா நகரில் கடந்த ஜூலை 11-ம் தேதி பசுவின் தோலை உரித்ததாகக் கூறி 7 தலித் சமூக மக்கள் மீது பசு பாதுகாப்பு இயக்கத்தினர் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தக் கானொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி நாடு முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து குஜராத் முழுவதும் தலித் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். தலித் மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமியரும் இணைந்து போராடி வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘தலித் அஸ்மிதா யாத்ரா’ என்று பெயரிடப்பட்ட தலித் சுயமரியாதை நடைப் பயணம் கடந்த ஜூலை 31-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஊர்வலம் அகமதாபாத்தில் தொடங்கி உனாவில் சுதந்திரத் தினத்தனறு (15 தேதி) நிறைவடைந்தது.
அன்று நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், ஜூலை-11 தாக்குதலில் பாதிக்கபட்ட பாலுபாய் சர்வையா குடும்பத்தினரும், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, டெல்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மற்றவர்களும் இந்தப் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பேரணியில் பங்கு கொண்ட மக்கள் வீடு திரும்பும் வழியில் அவர்கள் மீது பல இடங்களில் சாதிவெறி தாக்குதல்கள் நடந்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது . வாகனங்களை வழிமறித்து தாக்குவது, வாகனங்களை எரிப்பது போன்ற அசம்பாவிதங்கள் ஆங்காங்கே பல இடங்களில் நடைபெற்றதாகவும் இதில் பலர் காயமுற்றிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த தாக்குதலில் பாலு சர்வையாவின் குடும்பத்தினர் சென்ற வாகனமும் சிக்கியது.. கத்தி, கம்பு மற்றும் மண்னெண்ணை பாட்டில் சகிதமாக வந்த ஒரு கொலைவெறிக் கும்பல் தங்கள் காரை வழிமறித்து தாக்கியதாகவும், வாகன ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் கார் கண்ணாடி உடைந்தததால் ஏற்பட்ட காயங்களுடன் தப்பியதாகவும். அந்த இடத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் பாலு சர்வையாவின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியதாகவும் அதற்கு போலீஸ் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று பாலு சர்வையா குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இது குறித்து கருத்து தெரிவிக்க போலீஸ் தரப்பு மறுத்துவிட்டது.