ஜெய்ப்பூர்:

குதிரையில் சவாரி செய்யும் தலித்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாக நடந்து வருகிறது. குஜராத்தில் கடந்த மாதம் ஒரு தலித் வாலிபர் குதிரை மீது சவாரி செய்த காரணத்தால் உயர் வகுப்பினரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் கோவர்தன்புரா கிராமம் உள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் வாலிபருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இதற்காக அவரது உறவினர்கள் அவரை வீட்டில் இருந்து மாப்பிள்ளை ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் மாப்பிள்ளை குதிரை மீது உட்கார்ந்து வந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். குதிரையில் இருந்து மாப்பிள்ளையை இறங்கச் சொல்லி அடித்து உதைத்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

கிராம மக்கள் தாக்குதலில் இருந்து அந்த வாலிபரை மீட்க முயற்சித்தனர். ஆனால், பலர் கும்பலாக கூடி தாக்குதலில் ஈடுபட தொடங்கினர். பின்னர் வேறு வழியின்றி மாப்பிள்ளை ஊர்வலத்தை ரத்து செய்துவிட்டு வாலிபர் வீட்டிற்கு திரும்பினர்.

மாப்பிள்ளை ஊர்வலத்தில் குதிரை மீது உட்கார்ந்து செல்வது என்பது உயர் பிரிவு மக்களின் நடைமுறையாக அங்கு உள்ளது. இதை தலித் ஒருவர் பின்பற்றியதால் உயர் பிரிவு மக்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.