பசாய் பாபஸ், உ.பி.
உத்திரப் பிரதேச தலித் இளைஞரின் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் செல்ல மேல் சாதியினர் தடை விதித்ததற்கு மணமகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள பசாய் பாபஸ் என்னும் சிற்றூரில் வசிப்பவர் சஞ்சய் குமார். இவர் அந்தப் பகுதி ஊரக வளர்ச்சித் துறை உறுப்பினராக உள்ளவர். இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த ஷீதல் என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. மணமகள் நிஜாமாபாத் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். அந்த ஊரில் உள்ள நான்கு தலித் குடும்பங்களில் மணமகள் குடும்பமும் ஒன்று.
வட இந்திய வழக்கப்படி மணமகனை குதிரையில் ஏற்றி ஊர்வலம் மூலம் மணமேடக்கு அழைத்து வர மணமகள் ஷீதலின் குடும்பத்தினர் ஆசைப் பட்டனர். ஆனால் அவர்களின் வீட்டின் அருகே தாக்குர் என அழைக்கப்படும் உயர் சாதியினர் உள்ளனர். அவர்கள் தங்களின் தெரு வழியாக இந்த ஊர்வலம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஷீதலின் குடும்பத்தினர் இதை ஒப்புக் கொள்ளவில்லை. ஷீதலின் தாயார் மதுபாலா, “நாங்களும் இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் தான். எங்களுக்கும் இந்த சாலையில் உரிமை உள்ளது. எங்கள் வீட்டு மாப்பிள்ளையை குதிரையில் ஏற்றி ஊர்வலம் நடத்தி திருமணம் செய்து வைக்க எங்களுக்கு ஆசை இருக்காதா? இது எங்களுடைய மரியாதை பிரச்னை. எங்கள் சமூகத்தில் மாப்பிள்ளை என்பவர் மகாவிஷ்ணு போல. அவருக்கு மரியாதை அளிக்க வேண்டியது எங்கள் கடமை” என தெரிவித்துள்ளார்.
இதை ஒட்டி தலித்துகள் வீடுகளுக்கும் நிலங்களுக்கும் தங்கள் இடத்தின் வழியாக செல்லும் நீரினை தாகுர்கள் தடை செய்துள்ளனர். மணிக்கு ரு.100 வசூலித்து தண்ணீரை அனுமதிக்கின்றனர். மேலும் ஷீதலின் பள்ளி ஆசிரியர் மூலம் அவருக்கு 18 வயது ஆகவில்லை என பள்ளி சான்றிதழை மாற்றி உள்ளனர்.
இதற்கு மணமகன் சஞ்சய் குமார் மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். அத்துடன் இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் தயார் என கூறி உள்ளார். மேலும், “நான் ஒரு இந்து. ஒரு இந்துவாக எனக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்த உரிமை இல்லையா? இது இந்துக்களின் பூமி எனச் சொல்லும் யோகி ஆதித்ய நாத் ஆட்சியில் ஒரு இந்துவுக்கு அவன் மத வழக்கத்தை நிகழ்த்தவும் உரிமை இல்லையா? பிறகு மக்கள் அனைவரும் சமம் என அவர் கூறுவது எவ்வாறு? எனக்கு சட்டப்படி உள்ள உரிமையை பறிக்கக் கூடாது” என சஞ்சய் குமார் கூறி உள்ளார்.