தலாய் லாமா என்பது தனிநபரின் பெயரல்ல.
நமது ஊரில், காஞ்சி மடாதிபதி, மதுரை ஆதினம் போன்றே திபெத் நாட்டின் பௌத்தர்களின்
ஆன்மீகத் தலைவர், தலாய் லாமா (திபெத்திய மொழியில் கடல் -குரு) என்ற பதவிப் பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தலாய் லாமா தேர்வு செய்யப்படுவதில்லை. கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.
1391ம் ஆண்டு முதல் தலாய் லாமாவாய் கெண்டுன் ட்ருப் அடையாளம் காணப்பட்டார். தற்போது 14 ஆவது தலாய்லாமாவாக இருக்கும் தலாய் லாமாவிற்கு பெற்றோர் இட்ட பெயர் லாமோ தொண்டுப். அவரது பெற்றோருக்கு பிறந்த 16 குழந்தைகளில் ஒருவர். தலாய் லாமாவாக இனங்காணப்பட்டதன் பின் அவரது பெயர் “டென்ஸின் கியாட்ஸோ“.
தலாய் லாமாக்கள் புத்த பெருமானின் அவதாரங்கள் என்றே திபெத் மக்கள் நம்புகின்றனர். . ஒரு தலாய் லாமா இறந்ததும் அவரது ஆத்மா புதிதாக பிறந்த குழந்தையொன்றின் உடலினுள் புகுந்துகொள்வதாக அவர்கள் நம்புகின்றனர்.
பல்வேறு சோதனைகளின் ஊடாக இந்தக் குழந்தை இனங்காணப்பட்ட பின் ஊர்வலமாக லாஸா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு சம்பிரதாய முறையில் தலாய் லாமா என்ற புனிதப் பதவியில் அமர்த்தப்படும். லாஸாவிலுள்ள ஆயிரம் அறைகளைக் கொண்ட பொதாலா அரண்மனையே தலாய் லாமாவின் வாசஸ்தலமாகும். அங்கு விலைமதிப்பற்ற தங்கம் வெள்ளி உள்ளன.
தலாய் லாமாவுக்கு அடுத்த அந்தஸ்துள்ள பதவி பஞ்சன் லாமா ஆகும்.
திபெத்தியர்களைப் பொறுத்தவரை இவர்கள் இருவருமே அரசியல், ஆன்மீகம் இரண்டிலும் கௌரவமான உயர்பதவி வகிப்பவர்கள்.
ஒரு பஞ்சன் லாமா அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதும், அந்த தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமாவை தேர்வு செய்வதும் சங்கிலித் தொடர் போல் பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது பாரம்பரிய நடைமுறையாகும்.
1959 இல் திபெத்தின் மீது சீனா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போதைய தலாய் லாமா டென்சின் கியாட்சோ (24 வயது) சீன அரசிற்குப் பயந்து வெளியேறி இந்தியாவில் 1959ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 அன்று தஞ்சம் புகுந்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடைக்கலம் அளித்தார். இமயமலை அடிவாரத்திலுள்ள தரம்சாலா என்ற இடத்தில் எல்லை தாண்டிய திபெத்திய அரசு நிறுவப்பட்டது.
சீன அரசின் எதிரியாக கருதப்படும் தலாய் லாமாவுக்கு இந்தியா புகலிடம் அளித்ததை அடுத்து 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் நாள் சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. வேறு வழியின்றி இந்தியா அமெரிக்காவின் உதவியை நாடியது.
அப்போது அமெரிக்க அதிபராக இருந்த கென்னடியும் உதவிக்காக உடனடியாக விமானங்களையும் ஆயுதங்களையும் அனுப்புவதாக உறுதியளித்தார். சீனா என்ன நினைத்ததோ!
திடீரென போரை நிறுத்துவதாக அறிவித்தது. போர் நிறுத்தப்பட்டது. ஆனால் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 33,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை விட்டு அது நகரவில்லை. (அந்தப் பகுதியை இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுக்காமல் இன்றைக்கும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறது.) இரு நாடுகளுக்குமிடையே நடந்த போரில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. திபெத் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்திய பகுதிகளை சீனா வளைத்துக் கொண்டது.
இதன் மூலம் திபெத்தை சுற்றி இந்தியப் பகுதிகளையே வேலியாக்கிவிட்டது. பிரதமர் நேரு அதிர்ந்து போனார். தலாய் லாமா தன்னால்தான் இந்தியா மிகப் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டதாக வருந்தினார். நேருவிடம் நேரடியாகவே தனது வருத்தத்தை தெரிவித்தார்.
நேருவைத் தொடர்ந்து வந்த அனைத்து இந்தியப் பிரதமர்களும் தலாய் லாமாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர்.
1989 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி 10 ஆவது பஞ்சன் லாமா தனது 51 ஆவது வயதில் மர்மமான முறையில் திடீரென மரணமடைந்தார். பின்னர் ஆறு வருடங்கள் கழித்து 1995 ஆம் மே மாதம் 14 ஆம் திகதி தலாய் லாமா, புதிய பஞ்சன் லாமா கெதும் சோகி நியிமா என்பவரை நியமித்தார். சீன அரசு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் மகனான கியான்சென் நொர்பு என்பவரை பஞ்சன் லாமாவாக தேர்வு செய்திருக்கிறோம் என சீன அரசு அறிவித்தது.
தலாய் லாமாவுக்கு 1989 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உள்நாட்டு- வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் 84 டாக்டர் பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்தின.
இதுவரை சுமார் 62 நாடுகளுக்கு தலாய் லாமா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 106 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
தனிநாடு கோரிக்கையுடன் திபெத் மக்கள் இன்றளவும் போராடி வருகின்றனர். திபெத் மக்களை சீன இராணுவம் கொன்று குவித்து வருவதைக் கண்டு மனமுடைந்த தலாய்லாமா திபெத் மக்களுக்கு சுயாட்சி கொடுத்தால் போதும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனினும், இந்தியா காஷ்மீரில் செய்வது போலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் செய்வது போலும், இராணுவம் கொண்டு சுயாட்சி வேண்டிப் போராடும் மக்களை இனப்படுகொலை அல்லது ஒடுக்குவதை இன்றும் கைவிடவில்லை. தலாய் லாமா வின் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
தலாய் லாமா முழு வாழ்க்கை வரலாறு அறிய (புத்தகம்): தலாய் லாமா அரசியலும் ஆன்மீகமும் . ஆசிரியர்: ஜனனி ரமேஷ்.