பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.

இது தொடர்பாக ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது.

சமூக வலைதளத்தில் பதியப்பட்டதை தான் வெளியிட்டதாக அந்நிறுவனம் கூறியதுடன் இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், “செய்தியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் செய்தி வெளியிட்ட டைனிக் பாஸ்கர் பத்திரிக்கை தனது தவறுக்காக தனது பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் அல்லது இணையதளத்தின் முகப்பு பக்கத்தின் தவறான செய்தி வெளியிட்டதற்காக மன்னிப்பு வெளியிட வேண்டும்.

மேலும், மனுதாரர் ஆவடி குற்றவியல் காவல்துறை அதிகாரி முன் ஒரு வார காலத்திற்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் 25,000 ரூபாய்க்கு பிணை வழங்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.