சென்னை: சென்னை மாநகரின் தினசரி குடிநீர் வினியோகம் 975 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய ஏரிகள் நிறைவேற்றி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதிய மழை பெய்து வருவதால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் போதுமான அளவு நீர் உள்ளது. தற்போதைய நிலையில், மொத்த கொள்ளளவில் 29 சதவிகிதம் தண்ணீர் உள்ளதாகவும், அதாவது, 10 ஆயிரத்து 477 மில்லியன் கன அடி (10.47 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பதாகவும் குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.
மேலும், கிருஷ்ணா நதியில் இந்து பூண்டி ஏரிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது பூண்டி ஏரியில் அதாவது 81 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இதனால், சென்னையில் தினசரி குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நடப்பாண்டு தொடக்கத்தில் சென்னை மாநகருக்கு தினசரி 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், தினசரி விநியோகம் 1000 மில்லியன் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளனர்.