போபால்

காங்கிரஸ் அரசு கவிழும் என தினமும் பாஜக கூறி வருவதாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் கூறி உள்ளார்.


கர்நாடக மாநில காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே பெற்றது.  அரசுக்கு எதிராக 105 வாக்குகள் கிடைத்ததால் அரசு கவிழ்ந்துள்ளது.    இதற்கு பாஜகவின் உள்ளடி வேலைகளே காரணம் எனக் கூறப்பட்டு வருகிறது.  இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்த போதிலும் அடுத்து  கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை அமைக்கத் தயாராக உள்ளது.

இதை அடுத்து மத்தியப்பிரதேச மாநில பாஜக தலைவர் கோபால் பார்க்கவா செய்தியாளர்களிடம் கர்நாடகாவைப் போல் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை இல்லை எனவும் விரைவில் அந்த அரசு கவிழும் எனவும் தெரிவித்தார்.  இது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், “எங்கள் அரசை தினமும் சிறுபான்மை அரசு எனவும் எப்போதும் கவிழ்ந்து விடும் எனவும் பாஜக சொல்லி வருகிறது.   ஆனால் எங்கள் அரசு வலுவாக உள்ளது.  இன்று கிரிமினல் சட்டத் திருத்த மசோதாவுக்கு இரு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.