சென்னை: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான டாபர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்  கையெழுத்தானது.

தென் இந்தியாவில் முதல்முறையாக டாபர் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது. முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (22.8.2024) தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய் இ.ஆ.ப. தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, இ.ஆ.ப., சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மைய இயக்குநர் மருத்துவர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மோஹித் மல்ஹோத்ரா, செயல்பாட்டுத் தலைவர் ராகுல் அவஸ்தி, உற்பத்தித் தலைவர் ஹ்ரிகேஷ் ரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக, நேற்று (21.08.2024)  சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாட நடைபெற்றது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் ரூ.9.74 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதலமைச்சரின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தொழில் துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் அவர்கள் மொத்தம் 1,06,803 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் ரூ.17,616 கோடி முதலீட்டிலான 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டிலான 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.