சென்னை: சென்னையில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

வீட்டில் உபயோகப்படுத்தப்பட்டு வரும்  கேஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து கொண்டிருந்த நிலையில், அதை அறியாமல் வீட்டின் உரிமையாளர் டிவியை ஆன் செய்தததால் சிலிண்டர் வெடித்து வீடே இடிந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம்  அரங்கேறியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.

சென்னை விருகம்பாக்கம் நாராயணசாமி தெருவில் வசித்து வருபவர் பெருமாள் (55). கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். நாராயணசாமி தெருவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  சம்பவத்தன்று  இரவு வீட்டின் முதல் தளத்தில் பெருமாள் மகன் சேதுவும், மகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தரைதளத்தில் இருந்த பெருமாள், தூக்கம் வராத காரணத்தால் டிவியை ஆன் செய்துள்ளார். அடுத்த நொடியே சமையலறையில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள்ளாக, சிலிண்டர் வெடித்த அதிர்வில் அவர்களின் மொத்த வீடும் அப்படியே இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பெருமாளுக்கும் அல்லது அவரது குடும்பத்தினருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  விருகம்பாக்கம் காவல்துறையினர் சிலிண்டர் வெடிப்பு குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திடீரென வீடு இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

சிலிண்டர் இருக்கும் இடத்தை ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது சிறந்தது. எரிவாயு கசியும் வாசனை வந்தால், முதலில் வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும். அந்த சமயத்தில், எந்த ஸ்விட்சையும் ஆன் செய்யவோ, ஆஃப் செய்யவோ கூடாது. அதிலிருந்து வரும் சிறு தீப்பொறி கூட பெரிய விபத்தை ஏற்படுத்திவிடும் என தீயணைப்புத் துறையினர்  அறிவுறுத்தி உள்ளனர்.

[youtube-feed feed=1]