சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மோன்தா’ புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொன்தா புயல் காரணமாக ஆந்திராவில் இன்று 65 ரயில்கள் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26-ந்தேதி இரவு சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மோந்தா புயல் நிலவியது. இது நேற்று காலை 11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் வேகத்தில் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக சென்னைக்கு கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று காலை அல்லது மாலை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மோன்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது மசூலிபட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது என்றும், இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோந்தா புயல் காரணமாக காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
மொன்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. நேற்று காலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை, கத்திவாக்கத்தில் 9.5 செ.மீ, விம்கோ நகரில் 8 செ.மீ, மணலி, (மாதவரம், பெரம்பூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழைப்பொழிவு இருந்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். அதேபோல், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கோவை மாவட்ட புறநகர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், வருகிற நாட்களில் வட தமிழ்நாடு கடல் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஆந்திர மாநிலத்தில் 65 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என மொத்தம் 65 ரெயில்கள் நாளை வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வானிலை சீரானதும் நிலைமையை ஆராய்ந்து பின்னர் ரெயில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புயல் காரணமாக இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களும் விமான சேவையை நிறுத்தியுள்ளன. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
ஆந்திராவில் மொன்ன்தா புயலை எதிர்கொள்ள அம்மாநில அரசு முழுவீச்சில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா உள்ளிட்ட புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.