சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதற்கு ‘மோன்தா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமகா தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து மோன்தா புயலாக உருவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் உடனே கரை திரும்ப கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடல், அரபிக்கடல் இரண்டிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதற்கிடையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு 990 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும். அக்.27ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ‘மோன்தா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இதை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து கரையை கடக்க வாய்ப்புள்ளது. மேலும் புயல் சின்னத்தின் தற்போதைய நகர்வுகளின் படி சென்னைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாகும் என்பதால் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என கடலோர காவல்படை எச்சரிக்கை எச்சரித்துள்ளது. உரிய நேரத்தில் எச்சரிக்கை அனுப்பி, தமிழகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 985 மீன்பிடி படகுகளை ஏற்கனவே கரை திரும்ப வழியேற்படுத்தியிருப்பதாகவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கப்பல் மாலுமிகள் மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடலோர காவல்படையின் கிழக்குப் பகுதி கடலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பி அவர்கள் உடனடியாக கரை திரும்புவதற்கான விரிவான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
கடலில் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம், கடற்கரையோரங்களில் உள்ள ரேடார் நிலையங்களின் உதவியுடன், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், மீன்பிடி படகுகளுடன் விரைவில் அருகிலுள்ள துறைமுகத்திற்குத் திரும்புமாறும் அறிவுறுத்தி வருகிறது.
கடல் பகுதியில் உள்ள அனைத்து எண்ணெய் கிணறு உரிமையாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிழக்கு கடற்கரையில் உள்ள கடற்படையினர் மற்றும் எண்ணெய் கிணறுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடலோர காவல்படை விமானங்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தொடர் முயற்சியாக, தமிழகம், ஆந்திரம், புதுச்சேரியைச் சேர்ந்த 985 மீனவ படகுகள் பத்திரமாக கரை திரும்பியிருக்கின்றன.
புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் வரவழைக்கப்படுவதாகவும், உயிர்ச் சேதமோ படகுகளுக்குச் சேதமோ ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.