சென்னை: புயல் – கனமழை எச்சரிக்கை காரணமாக வடசென்னை பகுதியில் உள்ள சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் காரின் உரிமையாளர்கள் தங்களது சொகுசு கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர். மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மழைக்காலம் வந்தாலே சென்னை மக்கள், மழை வெள்ளத்தில் தத்தளிப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த ஆண்டும் மழையால் தண்ணீர் தேங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதுடன், மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இருந்தாலும், பொதுமக்கள் தங்களது வாகனங்கள் மழைநீரில் சேதமடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தொடர் மழை , புயல் தொடர்பான அறிவிப்பு வந்ததும், தங்களது வாகனங்களை மேடான பகுதிகளில், மேம்பாலங்களில் நிறுத்தி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் சென்னையில் பெய்த கனமழையின்போது, மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிப்படும் வேளச்சேரி மக்கள் தங்களது வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைத்ததும், அதற்கு அபராதம் விதிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தபோது, காவல்துறை மற்றும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் தமிழ்நாடு அரசை பலர் கடுமையாக சாடியிருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமான கனமழை குறைந்ததால், அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதால், சென்னையில், இன்றுமுதல் நாளை வரை கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையொட்டி, அதிக மழை பாதிப்பை எதிர்கொள்ளும் பகுதிகளில் உள்ள மக்கள், பலத்த காற்றுக்கு மத்தியில் சென்னையில் சாலையோரம் நிறுத்தப்படும் சொகுசு கார்கள் மேடான பகுதிகளிளும், பாலங்களின் மீது நிறுத்தி வருகின்றனர். அதுபோல சென்னையில் முக்கிய பாலங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அதன் தொடர்ச்சியாக வடசென்னை பகுதி மக்கள், சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோயில் சாலை, ராயபுரம் மேம்பாலம் அருகே சாலையில் இருபுறமும் பொதுமக்கள் தங்களுடைய சொகுசு கார்களை நிறுத்தி வருகின்றனர்.