சென்னை: ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், அதுகுறித்து  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

 மாமல்லபுரம் அருகே கரையை கடந்த பெஞ்சல் புயல் நிமிடத்துக்கு நிமிடம் தனது போக்கினை மாற்றி மாற்றி மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தது. இந்த புயல்  காரணமாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்படும் என நினைத்து தமிழ்நாடு அரசு, சென்னை பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தியது. ஆனால், புயலானதாக கடைசி நேரத்தில், சென்னை அருகே வராமல் திசை திரும்பி வடமாட்டங்களை புரட்டியெடுத்துள்ளது.

இதனால்,  திண்டிவனம்,  விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர், ராணிப்பேட்டை என பல மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. கொட்டிய மழையால் பல மாவட்ட ஏரிகள் நிரம்பிய நிலையில், அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏரிகளை திறந்து விட்டதால், தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய நீரால், பல கிராமங்கள்  நீரால் சூழப்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

புயல் சேதம் கறித்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான  சில பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் புயல் பாதிப்பு  மற்றும் மீட்பு பணிகள்,  நிவாரணம் குறித்து, இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், துணை முதல்வர், அமைச்சர்கள், முக்கிய துறை அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்கள், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.