சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் விசாரித்த நிலையில், புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகத்துக்கு குழுக்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 3 குழுக்கள் தமிழ்நாடு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சா புயல், கடந்த வாரம் முழுவதும் தமிழக மக்களை போக்குகாட்டி வந்தது. இறுதியில், கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இறுதி நேரத்திலும், சென்னையை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வடமாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றனது. இதனால், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் வடமாட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிறைந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி அணையில் இருந்து பெருமளவு நீர் வெளியேற்றப்பட்டதால், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளை திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்பு நிவாரண நிதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், தமிழகத்துக்கு வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுக்களை அனுப்புவது குறித்து உள்துறை அமைச்சகம் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறது. 3 மத்தியக் குழுக்களை தமிழகத்துக்கு அனுப்புவதற்கு உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியின் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.