தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளி புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று மதியம் 2:30 நிலவரப்படி ஃபெங்கல் புயல் நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நவம்பர் 30ஆம் தேதி பிற்பகலில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது மணிக்கு 50 – 60 கி.மீ. வேகத்தில் வீசிவரும் காற்று இன்று மாலை அல்லது இரவில் 80 கி.மீ. வேகத்திலும் நாளை காலை 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.