சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னையில் இன்றுமுதல் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. என்றும், இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
“தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) காலை 8.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,.
இதற்கிடையில், திங்கள்கிழமை இரவு முதலே தமிழக கடலோர மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டஙகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல, டெல்டா மாவட்டம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று அறிவித்துள்ளனர். அதே போல இன்று மாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் என மொத்தம் 31 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்) காலை 8.30 மணி நிலவரப்படி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 3 செ.மீ, கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், ஒய்எம்சிஏ நந்தனம், நாகை மாவட்டம் கோடியக்கரையில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. , தேனாம்பேட்டை, எம்ஜிஆர் நகர், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தலார ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.