சென்னை: தமிழ்நாட்டில்  ஃ பெஞ்சல் புயல் ஏற்படுத்தி உள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில், திமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசுக்கு அளிப்பதாக தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக முதலமைச்சர் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ள நிலையில், திமுக எம்.பி.க்களும் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.  மேலும், சாத்தனூர் அணையில் டிச.2ஆம் தேதி வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் முன்னறிவிப்பு இன்றி  திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில்கட்டப்பட்ட புதிய பாலம் அடித்துச்செல்லப்பட்டதுடன், பல கிராமங்கள், விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.  கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டு மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர். மேலும் திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. பல வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. விழுப்புரம், கடலூர் முழுவதும் கனமழையால் வெள்ள நீரில் மூழ்கியது.

மழை பாதித்த பகுதிகளில்  அரசு மற்றும் அரசியல்கட்சிகள், சமூதாய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும்  நிவாரணப் பொருள்களை அளித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் அனைவரும் தலா ரூ.1 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தகவல் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எம்.பிக்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சம். அத்துடன் எம்.பிகளுக்கு தினசரிப் படியாக நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த படியை பெற எம்.பி.க்கள்,  நாடாளுமன்ற செயலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டியது கட்டாயம்.